அமெரிக்கத் தமிழ் மருத்துவர் சங்கம் அட்மா, (ATMA). இது தகுமா?! சரியா?! முறையா?!  

உலகமுழுவதும் உள்ள தமிழ் கூறும் நல்லுலகைச் சேர்ந்த தமிழர்களே, நண்பர்களே, முகநூல் அன்பர்களே, வாட்ஸ் ஆப் தோழர்களே மற்றும் மிகக் குறிப்பாக அமெரிக்க வாழ் தமிழ் மருத்துவர்களே ………உங்களனைவருக்குமே தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து இந்த எளியோனின் ஒரு செய்தி, அழைப்பு இது. (முகநூலிலும் இதே வளர்பிறை என்ற பெயரிலேயே இயங்குகிறேன்)

wp-image--1042114989.

இத்தனை நாள் இதை வெளிப்படையாக வெளிப்படுத்தலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனேயே ஒரு மூடுதிரையிட்டுப் பொத்திப் போர்த்திப் பாதுகாத்துத் தான் வைத்திருந்தேன். ஆனால் இனிமேலும் இதை இப்படியேத் தொடர்வதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதால் இதை இப்போது இந்தப் பொது வெளியில் பகிர்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. குறிப்பாக, மிகக்குறிப்பாக அமெரிக்க வாழ்த் தமிழ் சமூகத்தின் பொது வெளியில் இது மிக அதிகமும் பகிரப்பட்டால், அது அவர்களுக்கும், சர்வ தேசச் சமூகத்திற்கும் மிகவும் பயனுள்ள ஒரு சர்வதேச, அரசியல், சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும் என்று நம்புகிறேன். மாறாக இதைப் பொத்தி வைப்பதால் அது தனிமனித அளவில் எனக்கே தான் ஆகட்டும் அல்லது நம் தமிழ் சமூகத்திற்கே தான் ஆகட்டும் அல்லது ஒட்டு மொத்த இந்த மானுட குல நன்மைக்கே தான் ஆகட்டும் எதற்குமே, எதன், எவர் ஒருவரின் நன்மைக்குமே கூட அது உகந்ததல்ல என்பதால் அதை வெளிப்படுத்துவதைத் தவிர்த்து இப்போதைக்கு எனக்கு வேறு வழியில்லை.

“உண்மைக்குத் தங்குமிடம் கிடைப்பது அரிது” என்பார் மேற்கத்தியத் தத்துவ ஞானி கதே. அதே போலத் தான், இது போன்ற தர்ம சங்கடமான உண்மைகள் இப்புவியில் எனக்கான தங்குமிடத்தை மயானத்தில் தான் ஒதுக்கித் தரக் கூடும் என்றாலும் பரவாயில்லை. வெளிப்படுத்துவதற்கான ஏற்ற சூழல், காலம் கனிந்திருந்தாலும் சரி அல்லது காயாக இருந்தாலும் சரி அல்லது இன்னும் மொட்டு விட்டு துளிர்க்கவே இல்லாவிட்டாலும் சரி. ஒரு பூவாகப் பூத்திருந்தாலே போதும். வெளிப்படுத்திவிடுவதே மானுட குலத் தர்மம் என என் மனதுக்குத் தோன்றுவதால், பூமியில் எனக்கான நாட்கள் மிகவும் அருகி வருவதாய் உணர்வதால், இதை உலகத் தமிழ் சமூகத்தின் பொது வெளியில் பொட்டெனப் போட்டுடைத்தே விடுவது என்றே இப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். இதைத் தவிர்த்து இப்போது எனக்கு வேறு வழி இருப்பதாய் தெரியாததால் அல்லது இருப்பதாகத் தோன்றினால்…. யார் அத்தகைய ஒரு வழிமுறையைக் காட்டினாலும் அதைப் பின்பற்றவும் அணியமாய் உள்ளேன். விஷயத்திற்கு வருகிறேன்.

கடந்த வருடம் தான் முதன் முதலாக நான் எனது 20 ஆண்டு காலத் தேடல் ஒன்று குறித்த, வலைப்பூ ஒன்றை வேர்ட் ப்ரஸ்ஸில் (https://sathukkapootham.WordPress.com.) சதுக்க பூதம்.வேர்ட்ப்ரஸ்.காம் என்ற பெயரில் ஒரு பதிவேற்றம் செய்திருந்தேன். அதுவும் ஒரு அமெச்சூர் தனமானப் பதிவு. (தொழில் முறை வலை தள வடிவமைப்பாளர்களுக்குச் செலவு செய்யும் அளவுக்குப் போதிய பொருளாதாரரம் இல்லாததால் நானே ஒரு அமெச்சூர் முயற்சியாக முதலில் டெக்ஸ்ட் மேட்டரை மட்டும் பதிவேற்றம் செய்திருந்தேன்) அப்படியென்ன இருபதாண்டு கால, ஜென்மாந்திரத் தேடல், சந்தேகம் என்கிறீர்களா?! ரொம்பப் பெரிதாகவெல்லாம் ஒன்றுமில்லை. மருத்துவத் துறையில் குழந்தையின்மைக்காக, அதிலும் குறிப்பாக ஆண்மலட்டுத் தன்மைக்காக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் ஒன்றான இக்சி என அழைக்கப்படும் (ஒரு வகையில், ஒரு அர்த்தத்தில் இறுதித் தீர்வான) ஒரு சிகிச்சை முறையைத் துஷ்பிரயோகம் செய்தால் எழக் கூடிய சமூகவியல் பின்விளைவுகளைப் பற்றியது அது.

பூடகமான வார்த்தைகளைத் தவிர்த்து பளிச்செனப் புரியும் படியான நேரடி வார்த்தைகளிலேயே கூற வேண்டுமானால் அது இது தான். ஒரு ஆணின் விந்தணுக்களை அவனுக்கேத் தெரியாமல் திருட முடியுமா?! முடியாதா?! அப்படித் திருட முடிந்து அதை ஒரு வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையாகவும் உருமாற்றம் செய்ய முடிந்தால் எழக் கூடிய சமூகவியல் சிக்கல்கள் எத்தகையது?! மனித சமூகத்துக்குள்ளும், அரசியலிலும், ஆன்மீகத்திற்குள்ளும் (அதாவது மதத்திற்குள்ளும்) அது என்னென்ன எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்?! இது பற்றியது தான் எனதந்த வலைப் பூவின் சாராம்சம்.

பதிவேற்றம் செய்திருந்த புதிது என ஞாபகம். வழக்கம் போல Google செய்து கொண்டிருந்த எனக்கு அப்போது திடீர் என ஒரு எண்ணம். பேசாமால் நமது வலைப்பூ சாராம்சத்தை சம்பந்தட்ட அமெரிக்க வாழ் தமிழ் மருத்துவர்கள் மத்தியிலேயே வைத்துக் கேட்டு விட்டால் என்ன?! நமது சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள இதை விடச் சிறந்த வேறு வழி என்ன தான் உள்ளது என சிந்தித்த நேரம்….. ! அப்படி ஒரு எண்ணம் தோன்றியதோ இல்லையோ, உடனே அப்படித் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்களுக்கான சங்கம் ஏதேனும் அமெரிக்காவில் இருக்கிறதா எனத் தேடிப்பார்த்தேன். நான் நினைத்ததைப் போலவே ATMA என ஒரு சங்கம் இருப்பதைக் காண நேரிட்டேன். (atmausa.org) இன்னும் எத்தனையோ ஏராளமான தமிழ் சங்கங்கள் இருந்தாலும், எனது தேடலுக்கேற்ற தமிழ் மருத்துவர்களுக்கான பிரதானத் தமிழ் சங்கமாய் இதுவே கண்ணுக்குப்பட்டதால்…..அத்தள (மருத்துவ) அங்கத்தினர்கள் பற்றிய முழு விபரங்களையும் காப்பி (நகல்) செய்ய முயற்சித்தேன்.

அப்பொழுது நான் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்காத சமயம். ஆனால் வாங்கும் உத்தேசத்திலிருந்த நேரம். அதனால் எனது பழைய நோக்கியோ ஆஸா 300 மொபைல் கொண்டு அந்தத் தளத்திலிருந்த (ஒரு 50, 60 நபர்கள் போல இருக்கும்) அந்த அஸோஸியேஷனைச் சேர்ந்த மொத்த அமெரிக்க வாழ்த் தமிழ் மருத்துவர்களின் முகவரி, மின்னஞ்சல், தொலை பேசி எண் உட்பட அனைத்தையும் ஒரு ஒட்டு மொத்த நகல் எடுக்க முயன்றேன். ஆனால் எனது துரதிஷ்டமோ என்னவோ, அல்லது எனது நோக்கியாவின் திறன் குறைவு காரணமாகவோ அல்லது அந்தத் தளம் முழுவதுமே என்கிரிப்ட் செய்யப்பட்டிருந்ததோ என்னவோ, எதன் பொருட்டோ, எதன் காரணமாகவோ மொத்தத்தில் அந்தத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த அந்த மருத்துவ அஸோசியேஷனைச் சேர்ந்த இதர அங்கத்தினர்களின் எந்த ஒரு முகவரியையோ, அல்லது மின்னஞ்சல், தொலை பேசி எண் உட்பட எந்த ஒரு விபரத்தையும் என்னால் காப்பி, பேஸ்ட் செய்யவே இயலவில்லை.

ATMA’S current (2017) president

நானும் பேப்பர் பேனா எடுத்து எழுதிக் காப்பி செய்து கொள்ளச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு, தளத்தில் குறிப்பிட்டிருந்த அந்த அஸோஸியேசனின் (ATMA- American Tamil Medical Asociation-னின்) அந்த நேரத்து (2015-2016) ப்ரஸிடென்ட்டான டாக்டர் கலைச் செல்லம் பார்த்திபன் என்பவரது மின்னஞ்சல் முகவரியை மட்டும் குறித்துக் கொண்டு, மற்றவற்றை நாம் தான் விரைவிலேயே ஆண்ட்ராய்டு செட் ஒன்று வாங்கப் போகிறோமில்லையா அப்போது ஸ்கிரீன் ஷாட்டாய் அனைத்து முகவரிகளையும் (தொலை பேசி, மின்னஞ்சல் முகவரி உட்பட) எடுத்துக் கொண்டால் போயிற்று. ஏன் கை ஒடிய Imposition எழுதுவது போல எழுத வேண்டும்?! எனக் கையில் பணம் தயாராய் இருந்த போதும் எந்த செட் மாடல் எனது பட்ஜெட்டுக்கு ஒத்து வரும் எனத் தினமும் எனக்கு எனது பட்ஜெட்டுக்கேற்ற மாடலாய் எது விளங்கக் கூடும்?! எனத் தினமும் ஸின்ஸியராய் கூகுள் தேடலில் மூழ்கிக் கொண்டிருந்த நேரம்.

பேப்பர் பேனாத் தேடி, மற்ற மருத்துவர்களின் மின்னஞ்சல், தொ.பே.எண்கள் எழுதத் தான் சோம்பேறித்தனம் கொண்டிருந்தேனே ஒழிய எனது தேடல், ஆர்வத் தீயில் சோம்பேறித்தனம் எனும் ஒரு சொட்டு நீர் கூடப் பிரவேசிக்காத நேரம். ஆர்வ மிகுதியை அடக்க இயலாமல், ஆண்ட்ராய்டு வரும் வரை காத்திருக்க மனமின்றி (பின்னே ஒரு நாள் இரண்டு நாள் சந்தேகமா என்ன?!… வருடக் கணக்கில் சற்றேறக் குறைய 20 வருடங்கள் சுமந்து கொண்டிருந்த நீண்ட நெடு வருட ஒரு ஜென்மாந்திர சந்தேகமல்லவா அது?! 2000 மில்லினியம் ஆண்டுகளில் (ராஜீவ் கொலை வழக்குப் புகழ்) தடய அறிவியல் விஞ்ஞானியான சந்திர சேகர் ஐ.ஏ.எஸ்ஸிடம் ஏற்கனவேயே கேட்டுத் தெளிவு படுத்திக் கொள்ள முயன்றிருந்த ஒரு விஷயம் தான் அது.

பதினெட்டு ஆண்டுகளாக சுமந்து கொண்டிருந்த, அந்தச் சிலுவை வேதனைச் சுமையிலிருந்து ATMA மூலமாகவேனும் ஒரு சிறு விடுதலைப் பெருமூச்சு (நன்கு கவனிக்கவும் முழு விடுதலைப் பெருமூச்சல்ல. ஒரு சிறு விடுதலைப் பெரு மூச்சாவது) கிடைக்கக் கூடும் என்றெண்ணித் தான் கடந்த வருடம், (டாக்டர் கலைச் செல்லம் பார்த்திபன் ப்ரெஸிடென்டாக இருந்த 2016-ம் வருடம்) திருமதி கலைப் பார்த்திபன் அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் (கூடவே ஒரு வாய்ஸ் மெஸேஜுடன்) அனுப்பியிருந்தேன். ஆனால் அவரோ அந்த ஆசையில் ஒட்டு மொத்தமாய் ஒரு மண்ணள்ளிப் போடும் விதமாக ஒரு காரியம் செய்தார். அது எனது மின்னஞ்சலுக்கு அவரிடமிருந்து நேரடியாக எந்த விதமான பதில் ரெஸ்பான்ஸும் இல்லையென்றாலும் மறைமுகமான வகையில் ஒரு வித எதிர் வினையாற்றியிருந்தார். அது அந்தத் தளத்திலிருந்த மற்ற மருத்துவ அங்கத்தினர்களின் தொலை பேசி, மின்னஞ்சல் முகவரிகளை (புகைப்படம்) உட்பட அனைத்தையும் நீக்கியது தான். உலகக் கருத்துச் சுதந்திரத்தின் சாஸ்திரியக் களமாக, அதன் குறியீடாகவே பார்க்கப்படும் அமெரிக்காவில், அட்மாவின் ப்ரஸிடெண்ட்டாக மற்றத் தமிழ் மருத்துவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்குள் தலையிட்டு மூக்கை நுழைக்க அட்மாவின் ப்ரெஸிடெண்ட்களுக்கு உண்மையில் அந்த அதிகாரம் உள்ளதா?! ! அவர்களது தொ.பேசி எண், மின்னஞ்சல் முகவரிகளை ஒளித்து மறைத்து வைத்து விடுவதின் மூலம் இவர்கள் சாதிக்க விரும்புவது தான் என்ன?! எனது விஷயம் குறித்து அட்மாவிலுள்ள ஒவ்வொரு மருத்துவரும் அவரவர்களே அவர்களது சொந்த முடிவை எடுத்துக் கொள்ள அவர்களுக்கு ஒரு அனுமதி கிடையாதா?!. அவர்கள் அத்தனை பேரும் அவர்களது கருத்துச் சுதந்திரத்தை அடகு வைத்து தான் அட்மாவில் இணைந்துள்ளனரா?

நான் ஒத்துக் கொள்கிறேன். நான் அனுப்பிய விஷய சாரமும் அப்படி ஒன்றும் அப்பாவித்தனமான ஒன்றல்ல, மிக வில்லங்கமான ஒன்று தான். இல்லையென்கவில்லை. இந்த உலகத்திலேயே மிக வலிமை வாய்ந்த ஒரு நாட்டை டென்சனுக்குள்ளாக்குவதைப் போன்ற, அதைப் பலவீனப்படுத்துகிற ஒரு விஷயம் தான். அது சம்பந்தமாக எனக்குத் தேவைப்படும் எந்த ஒரு சிறு உதவியென்றாலும் கூட அதையும் அதிலும் பிழைக்கப் போன அந்த மருத்துவர்களிடம் அவர்களின் அந்தப் பிழைப்பிலேயே மண்ணை அள்ளிப்போடும் விதமாக ஒரு உதவியை கேட்பது என்பது எந்த விதத்தில் நியாயம்?! என்று கூட பார்வையாளர்கள் தரப்பிலிருந்தும் இதற்கொரு தர்க்க நியாயத்துடன் கேள்விகள் எழலாம். இதற்கான பதில் தனிமனிதச் சார்பில் இல்லையென்று தான் சொல்வேன்.

இராபர்ட் க்ளைவும், கொலம்பஸும் இப்படியெல்லாம் யோசித்திருந்தால் இன்று சரித்திரம் எப்படியிருந்திருக்கும்?! இன்றிருக்கும் இடத்திற்குத் தான் நகர்ந்திருக்குமா?! வெறும் வயிற்றுப் பிழைப்பு வாழ்க்கை தாண்டி அவர்கள் யோசிக்காமல் போயிருந்தால் சரித்திரத்தின் போக்கே இன்று எப்படி அமைந்திருக்குமோ தெரியாது. ஆனால் நிச்சயம் இன்றிருப்பதைப் போல அமைந்திருக்காது என்பது மட்டும் நிச்சயம். வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்களும், ஐரோப்பியர்களும் ஆக்ரமிப்பாளர்களாய் மாறியிருக்க முடியாது. இந்தியாவிற்குக் கடல் வழி கண்டுபிடிக்க எண்ணிய கொலம்பஸின் வாரிசுகள் 2,3 கண்டங்களையே ஆக்ரமித்த ஆக்ரமிப்பாளர்களாயும் மாறியிருக்கவே முடியாது. atma -வின் முன்னாள் பிரஸிடெண்ட் திருமதி கலைச் செல்லம் பார்த்திபன் அவர்கள் தான் ஆகட்டும், அல்லது அதன் இன்றைய இந்நாள் பிரஸிடெண்ட் திரு வீரப்பன் சுந்தர் தான் ஆகட்டும், இல்லை ஆண்டுக்கு 100 கோடி சம்பளம் வாங்கும் நம் சுந்தர் பிச்சை தான் ஆகட்டும் (ஏன் ஒட்டு மொத்த அமெரிக்க வாழ் தமிழர்களே, இந்தியர்களே தான் ஆகட்டும்) இவர்கள் யாருமே ஒரு பிழைப்பு தேடி அமெரிக்கா என்ற ஒரு தேசத்திற்கேக் கூடச் சென்றிருக்க, முடிந்திருக்க முடியாது.

கிறிஸ்தவம் கூறும் ஆதாம் ஏவாள் முதல் பாவம் போல இதற்கெல்லாம் முதற் பிள்ளையார் சுழி கொலம்பஸ், இராபர்ட் க்ளைவ் போன்றவர்கள் தான். அவர்கள் எப்படி அன்றைய சரித்திரத் திருப்பம் வாய்ந்த முக்கிய நிகழ்வுகளின் கதா நாயகர்களோ (அல்லது வில்லன்களோ) அப்படித் தான் இன்று அமெரிக்காவிலுள்ள புலம் பெயர்ந்து வந்து செட்டிலாகியுள்ள ஒவ்வொரு வெளிநாடு வாழ் அமெரிக்கனும். தமிழர்கள், இந்தியர்களுக்கு மட்டுமல்ல, மற்ற நாட்டவர்களுக்கும் சேர்த்தே இது பொருந்தும். எனதந்த வலைப் பூவின் சாராம்சம் உண்மையில் இக்ஸித் துஸ்பிரயோகமும் அதன் தீர்வும் என்ற தலைப்பில் மட்டுமே அடங்குவதல்ல. ஆத்திகம், நாத்திகம், அரசியல், அறிவியல், மனித ஒழுக்கத்தின் படிநிலைகளை அளக்க உதவும் அறிவியல் அடிப்படையில் அமைந்த ஒரு அளவீட்டு முறை என அதற்கொருப் பன்முகப் பரிமாணமே (Multi dimentional view) இருக்கிறது. அதன் பன்முகப் பரிமாணம் காரணமாகவே அதன் பயணத்தில் அதன் துவக்கக் காலத்திலிருந்தே அது பல்வேறு வகை இடர்பாடுகளை, நெருடலான அனுபவங்களை, இருட்டடிப்பு முயற்சிகளை, மௌனம் சாதித்தே இதைக் கொன்று விடலாம் என்ற எத்தனிப்புகளை எல்லாம் சந்தித்தே கடந்து வந்திருக்கிறது. புறக்கணிப்புகள் ஒன்றும் புதிதல்ல.

முதன் முதலில் (1996-97 களில்) இதன் கர்ண கடூரமான பண்படாத வடிவத்துடன் இது தன் பயணத்தைத் துவங்கிய முதல் நதி மூல, ரிஷி மூல இடமென்றால் அது சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் என்று தான் சொல்வேன். அங்கு ஏற்பட்டக் கசப்பான அனுபவங்களினாலேயே, இதை அடுத்து எங்கு எடுத்துச் செல்வது என ஒரு இலக்குத் தெரியாத நிலையில், அடுத்தடுத்துத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியப் பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், (ஏன் சில முக்கிய நடிகர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள் கூட இந்தப் பட்டியலில் அடங்குவர்.) சிந்தனையாளர்கள், ஆத்திகர்கள், நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் என அடுத்தடுத்து இதைச் சந்திக்க, எதிரிட நேராத முக்கியத் தமிழ் பிரமுகர்களே தமிழ் நாட்டில் (அந்தக் காலக் கட்டத்தில், 1997-2001ல்) இல்லை எனும் அளவுக்கு அந்தளவுக்குத் தமிழகம் முழுக்க ஒரு 5 ஆண்டுகள் Snail mail எனப்படும் நத்தை வேகக் கடித வழிப் பயணத்திலிருந்து E-mail யுகம் வரை பயணித்து இந்தப் பூமிப் பந்தையே அதற்குள் (1997-2001 க்குள்) சில சுற்றுக்கள் சுற்றி வந்து விட்டிருந்தது. இண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்க ரஷ்ய பனிப்போரில் அமெரிக்காவின் கை ஓங்கத் துவங்கி 1992-ல் ரஷ்யச் சிதறலுடனும் இந்தியாவில் (ஈழ விடுதலைப் போராட்டம் காரணமாக) ராஜீவ் காந்தி கொலையுடனும் முடிந்திருந்தது. உலக அரங்கில் ரஷ்ய வீழ்ச்சி, இந்தியாவில் ராஜீவ் காந்தி மரணம் என்ற அடுத்தடுத்த நிகழ்வு காரணமாக முதலாளித்துவ அமெரிக்காவின் புதிய தாராளமய, தனியார் மய அலை பேரெழுச்சியுடன் இந்தியாவுக்குள்ளும் காட், டங்கல் ஒப்பந்தத்துடன் நுழைகிறது.

(20-ம் நூற்றாண்டு என்றால் இரண்டு பெரும் உலகப் போர் நிகழ்வுகளுக்கு அடுத்து அந்த நூற்றாண்டின் முக்கியக் குறியீடுகளிலேயே ஒன்றாகிப் போன) பில் கேட்ஸின் கணினிப் புரட்சியும் இதே காலக் கட்டத்தில் தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தாண்டி இந்தியச் சமூகத்துள்ளும் ஊடுருவ ஆரம்பிக்கிறது. என்ற போதிலும் பில் கேட்ஸின் கணினி புரட்சியும் நகர்ப்புறங்கள் தாண்டி தமிழ்ச் சமூகத்தின் கிராமியப் புறங்களுக்குள் அதிகம் ஊடுருவியிராத ஓரு ஆரம்பக் கன்னிப் பருவம் என்று தான் கூற வேண்டும். அதன் வீச்சு, ஊடுருவல் நகர்ப்புறங்கள் தாண்டி கிராமங்களுக்குள் ஊடுருவும் முன்னரே வரத்துக் குன்றிய காவிரியைப் போல் ஆனது. பெரு மழைக்குக் காத்திருக்கும் கடைமடை வயல் வெளிகளைப் போல கிராமப் புறங்கள் கூகுளின் (நம் சுந்தர் பிச்சையின்) ஆண்ட்ராய்டு யுகம் பிறக்கும் வரைக் காத்திருக்கத் தான் வேண்டியதாகியது. மைக்ரோ சாஃப்ட், கூகுள், முகநூல், ட்விட்டர் யுகத்தை நாம் தமிழகப் பருவமழைப் பொழிவுகளுடன் ஒப்பிட்டால் மைக்ரோ சாஃப்டை தென்மேற்குப் பருவ மழைப் பொழிவுடனும், கூகுளின் ஆண்ட்ராய்டு, முகநூல், ட்விட்டர் யுகத்தை வடகிழக்குப் பருவ மழையுடனும் தான் ஒப்பிட முடியும். தென்மேற்குப் பருவ மழையால் அதிகம் பயன் பெற இயலாத மழை மறைவுப் பிரதேசமானத் தமிழகம், பின் அதை வடகிழக்குப் பருவ மழையால் ஈடுகட்டிக் கொள்வதைப் போலத் தான் பில் கேட்ஸின் கணினிப் புரட்சித் தோற்றுவித்த எழுச்சி அலை மேற்குத் தொடர்ச்சி மலைகள் எனும் பொருளாதர மதிற்சுவர்களைக் கடந்து தமிழகக் குக்கிராமங்களை அதிகம் ஊடுருவ இயலவில்லை என்றே சொல்வேன்.

ஆனால் சுந்தர் பிச்சையும் கூகுளும் கொண்டு வந்த ஆண்ட்ராய்டு யுகமோ தமிழ் தேசத்திற்கு (மட்டுமல்ல, இந்தக் கிரகம் முழுவதற்குமேக் கூட) முற்ற முழுக்கக் கவர் செய்யாவிட்டாலும், முக்காலே மூன்று வீசம் (70-80% போலப்) பொழியும் வடகிழக்குப் பருவ மழையைப் போல. மேசைக் கணினிகள், மடிக்கணினிகள் சுருங்கி, திறன் பேசிகளே அலைபேசியாய், கணினிகளாய் பல் அவதாரமெடுக்க, இன்னொரு புறம் சமூக வலைதளங்களும் பெருக, தனிமனிதக் கருத்துச் சுதந்திரத்தின் எல்லைப் பத்திரிக்கை அலுவலகங்களின் உறைந்த 4 சுவர் எல்லைகளை தாணடி, உடைத்துக் கொண்டுப் பீரீடும் நார்னிய நதியோட்டமாய் உலகப் பெருவெளி எனும் கருத்துச் சமுத்திரங்களை நோக்கிச் சுதந்திரத்துடன் பாய்ந்து கொண்டுள்ளது.

தமிழ், (இந்தியச்) சமூகவியல் குறித்த எனது இந்தக் (கிட்டத்தட்ட) ஆராய்ச்சி முறை செல்லத் தக்கது என ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் பிராமண எழுத்தாளர் பாலகுமாரன், சுஜாதா, துக்ளக் சோ, வந்தார்கள் வென்றார்கள் சரித்திரத் தொடர் புகழ், கார்ட்டூனிஸ்ட் மதன், மணிரத்னம் போன்ற திரையுலகப் பிராமணர்கள் இத்யாதி இத்யாதி போன்றவர்கள் நிர்மாணித்துள்ள, நிர்மாணிக்க எண்ணியிருந்த நேர்த்தியான ஹிந்துத்துவு சமூகவியல் கட்டமைப்பு, கருத்தியல் அமைவு, (one india, one language, one reliegion, one culture) வெறும் காற்றெனக் கரைந்து போனாலும் போகக் கூடும். என்னுடைய வேலை என்பது வெறும் ஒரு நாள் வேலையல்ல. ஒரு அர்த்தத்தில் “குடும்பம், தனிச் சொத்து அரசு இவற்றின் தோற்றம்” புத்தகத்தில் எங்கெல்ஸ் குறிப்பிடுவாரே மார்கன், பாகோபென், அந்த மார்கன், பாகோபெனைப் போலத் தான்.

அவர்கள் விட்டுச் சென்ற ஒரு மகத்தான பணியின் ஒரு பின் தொடர்ச்சியைப் போலத் தான். இன்னொரு அர்த்தத்திலோ சுவாமி விவேகானந்தர் விட்டுச் சென்ற ஒரு மாபெரும் பணியின் பின் தொடர்ச்சி எனவும் குறிப்பிடலாம். (பார்க்கவும் எனது வலைப் பூ அத்தியாயம் 12, பக்- ) முன்னவர்களின் அரும் பணியைத் தொகுத்தவரும் கம்யூனிஸ்டுகளின் ஞானப் பிதாமகர்களில் ஒருவருமான பிரடெரிக் எங்கெல்ஸோ ஒரு நாத்திகர். பிந்தையவரான ஹிந்து மதத்தின் புகழ் பெற்ற வீரத் துறவியான சுவாமி விவேகானந்தரோ அக்மார்க் ஆத்திகர். உலகப் புகழ் பெற்ற நாத்திகர் ஒருவரின் பணியும் அதற்கு நேர் எதிரிடையாக உலகப் புகழ் பெற்ற ஆத்திகர் ஒருவர் விட்டுச் சென்ற ஒரு பணியும் தெரிந்தோ தெரியாமலோ (அதாவது ஆத்திகமும் நாத்திகமும் இணைந்து வரவேற்கும் ஒரு புனிதப் புகழ் மிக்க பணியைத் தான் முன்னெடுத்துக் கொண்டுள்ளேன் என்பது தான் இதில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நகை முரணே.

மனித குலத்தின் குடும்ப வரலாற்றைப் பற்றிய தனது ஆராய்ச்சிக்கு மார்கன் எடுத்துக் கொண்ட காலம் 40 ஆண்டுகள் என்றால் எனது இந்த சிறு ஆய்வு(?!) முடிவை ஒரு செயற்பாட்டுக்குக் கொண்டு வர இது வரை (இந்த 2017-வரை) நான் எடுத்துக் கொண்ட காலம் சற்றேறக்குறைய 31 ஆண்டுகள் என்று தான் சொல்ல வேண்டும். நான் ஒன்றும் பெரிதாக எந்த ஒரு கண்டுபிடிப்பையும் ஆராய்ச்சியையும் சாஸ்திரிய அறிவியலில் (classical science-ல்) செய்து விடவில்லை தான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் சமூக அறிவியலில் நிச்சயம் இது ஒரு பிரளயத்தை ஏற்படுத்தப் போகிற ஒரு விஷயமாய் வருங்காலத்தில் உருமாறத் தான் போகிறது என்பதை இவ்வுலகம் பொறுத்திருந்து பார்க்கத் தான் போகிறது. அதாவது நான் முன் மொழிந்துள்ள இச் சிறு விஷயம், அதாவது இக்ஸித் துஷ்பிரயோகத்துக்கான தீர்வு என்ற இச் சிறு விஷயம், தவிர்க்க இயலாமல் அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உலக மதங்களில் உள்ள போலித் துறவிகளையெல்லாம் நிச்சயம் சுட்டெரித்து, நடு நடுங்கச் செய்தே தீரும்.

ஒரு ஈ.வெ.ரா. பெரியாருக்கே இலட்சம் கோடி முறை சபிக்கக் கூடிய புரோகிதப் பிராமணர்கள் இலட்சம் பெரியாரை, ஆயிரம் கார்ல் மார்க்ஸை தனக்குள் சூழ் கொண்டுள்ள எனது கின்னஸ் மறுதலிப்புத் திட்டத்தையும் அதை ஒரு செயல்பாட்டுக்குக் கொண்டுவர துடிக்கும் என்னையும் சபிக்க எத்தனை லட்சம் கோடி முறைக் (எதிர் வரும் ஊழி ஊழிக் காலங்களுக்கும்) காத்துக் கொண்டிருப்பரோ?! தெரியவில்லை. வங்காளப் பிராமணரான ராகுல் சாங்க்ருத்யாயன், பாரதி, அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சாரியர் (முன்பொரு சமயம் நக்கீரனில் ஹிந்து மதம் எங்கே போகிறது தொடரை எழுதியவர்.) போன்ற முற்போக்குப் பிராமணர்கள் இதை எதிர்க்கப்போவதில்லை. மாறாக வரவேற்கவே செய்வர். ஆனால் ஹிந்து மதத்தில் அத்தகைய முற்போக்குப் பிராமணர்கள் எத்தனை பேர் தேறுவர்?! ஹிந்து மதப் புரோகிதர்கள் தான் என்றில்லை. மொத்தத்தில் உலகெங்குமுள்ள போலிச் சாமியார்கள், போலி மதக் குருமார்கள் இவர்கள் அத்தனை பேரையும் அலற வைக்கக் கூடிய ஒரு ஆய்வு முறையாகவும் (எனது இந்த ஆய்வு முறை செல்லத் தக்கது என ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில்) வருங்காலங்களில் பேசப்படும் என்று நம்புகிறேன்.

மிகவும் புராதனமான புராண இதிகாச காலங்களிலிருந்து இன்றைய நவீன அணுயுக, ரோபோக் காலம் வரை யாருக்கும் தெரியாத ஒரு புராதன நிலை குறித்து (வெறுமனமே புராதன நிலை என்றும் கூறி விட முடியாது இன்றும் இன்றளவும் ஒரு உயிர்ப்புடனும் உயிர்த் துடிப்புடனும் உள்ள ஒரு விஷயம்) குறித்து, வெறும் புரியாத பூடக வார்த்தை அளப்புகளை விடுத்து முதன் முதலில் அதற்கு ஒரு நிரூபணம் தர முயற்சிக்கும் எனது இந்த சமூகவியல் ஆராய்ச்சி முறை மட்டும் செல்லத் தக்கது என ஏற்றுக் கொள்ளப்பட்டால், (இன்னும் புரியக் கூடிய நேரடியான எளிய வார்த்தைகளில் கூறுவதானால்,) மனித ஒழுக்கத்தின் படிநிலைகளாம் கற்பு, பிரம்மச்சரியம், நைஷ்டிகப் பிரம்மச்சரியம் போன்ற சொல்லாடல்களெல்லாம் வெறும் கற்பிதமா?! அல்லது உண்மையாகவே இந்த லௌகீக உலகிலும் அவற்றிற்கொரு பௌதீக மதிப்பு உண்டா?! இருக்கத் தான் செய்கிறதா?! என்ற நெருப்புக் கேள்விக்கு விரைவில் ஒரு இ(வி)ருப்புப் பதில் கிடைத்து விடும். வெறும் வார்த்தையளப்புகளுக்குப் பதில் மனித குலத்தின் வரலாற்றிலேயே முதன் முதலாக அதற்கு ஒரு நிரூபணமும் பௌதீக, லௌகீக மதிப்பும் கிடைத்து விடும் என்றும் நம்புகிறேன்.

ஆனால் தமிழ் நெஞ்சங்களே இச் சித்திரத்தின் முழுப் பரிமாணமும் உங்களுக்குப் புரிய வேண்டுமென்றால்,

முதலில்

1). இக்ஸி என்றால் என்ன?! (தெளிவான விளக்கத்திற்கு கின்னஸுக்கு ஒரு கடைசிக் கடிதம் பக்- பார்க்கவும் )

2). அதைத் துஷ்பிரயோகம் செய்தல் அதாவது இக்ஸித் துஸ்பிரயோகம் என்றால் என்ன?!

3). அந்த இக்ஸித் துஷ்பிரயோகச் சிக்கலுக்கும் மனித ஒழுக்கத்தின் படிநிலைகளாம் கற்பு, பிரம்மச்சரியம், நைஷ்டிகப் பிரம்மச்சரியம் என்ற பண்பு நிலைகளுக்குமிடையேயுள்ள சம்பந்தம் என்ன?! (இதைப் புரிந்து கொள்ள எனது வலைப் பூவின் விஜய் டீ.வி. யின் புதிரா புனிதமா நிகழ்ச்சி புகழ் மாத்ரு பூதத்துக்கு எழுதிய கடிதம் பகுதியையும் கின்னஸுக்கு ஒரு கடைசிக் கடிதம் பகுதிதியின் கடைசி இரு பக்கங்களையும் பார்க்கவும்.)

4). மிகக் குறிப்பாக அப்பண்பு நிலைகளை அளக்க உதவும் (அறிவியல் அடிப்படையில் அமைந்த) ஒரு அளவீட்டு முறைக்கும் இக்ஸித் துஸ்பிரயோகத் தீர்வுக்கும் இடையேயுள்ள தொடர்புறவு என்றால் என்ன?! (கின்னஸுக்கு ஒரு கடைசிக் கடிதத்தின் கடித இறுதிப் பகுதியை பக்- பார்க்கவும்)

5). மேற்கூறிய இந்த விஷயங்களுக்கும் உலகின் தலைமைக் கோடீசுவரருக்கும் என்ன சம்பந்தம்?!,

6). பிந்தைய மனிதருக்கும் அமெரிக்கப்பங்குச் சந்தைக்கும், அமெரிக்கப்பங்குச் சந்தைக்கும், சர்வதேச அரசியலுக்கும் ஆகிய இவற்றுக்கிடையில் எல்லாம் உள்ள சம்பந்தம் என்ன?!

7). சீனா, பாகிஸ்தான், இலங்கை, போன்ற அண்டை நாடுகளோடும் ரஷ்யா, அமெரிக்கா, போன்ற அயல் நாடுகளும், வல்லரசு நாடுகளுமான அவற்றுடனும், சர்வதேச அரசியல், சர்வ தேச பங்குச் சந்தை, முதலிய இவற்றோடும் இந்து, கிறித்துவ, இஸ்லாமிய மதங்களோடும் இந்தியாவுக்கு உள்ள சம்பந்தம் என்ன?!

8). இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள சம்பந்தம் என்ன?!

9). தமிழ் நாட்டிற்கும், தமிழர்க்கும், டெல்லிக்கும், ஜல்லிக்கட்டுக்கும், காவிரிப் பிரச்னைக்கும் தமிழ்க் கல்வி(மொழி)க்கும், இடையே உள்ள சம்பந்தம் என்ன?!

10). தமிழர்க்கும் தமிழர்க்கும் இடையே உள்ள முக்கிய சம்பந்தம் என்ன?! ஜாதி, மதம், மொழி, நிறம், வாழும் நாடு இதற்கும் தமிழனுக்கும் இடையே உள்ள சம்பந்தம் என்ன ?!

11). இந்த யாவற்றிலும் யாவற்றோடும் ஒன்றோடு மற்றொன்றுக்கு உள்ள சம்பந்தம் என்ன?! என்ற புரிதல் வேண்டும்!

12). இதற்கெல்லாம் முதலில் ஒரே ஒரு முறையாவது எனது வலைப் பூப் பக்கமும் வருகை தரவேண்டும். வருகை தருவதோடு நில்லாமல் எனது வலைப்பூவின் முழுச் சாராம்சத்தையும் ஒரே ஒரு முறையாவது முழுவதும் நேரமொதுக்கிப் பொறுமையயுடன் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்.

ஆகத் தமிழ் கூறும் நல்லுலகைச் சேர்ந்தோரே, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய நிகழ்வை நோக்கிய எனது கின்னஸ் மறுதலிப்புத் திட்டம் சம்பந்தமான எனது இந்த வலைப் பூவை முதலில் அமெரிக்க வாழ் தமிழர்கள் மத்தியில் வைரலாக்குவது தான் இதன் இலக்குப் புள்ளி நோக்கிய ஒரு முக்கிய நகர்வாய் அமையக் கூடும். அதற்கான ஒரு தார்மீக பலத்தை, தைரியத்தை உலகத் தமிழர்களான நீங்கள் தான் ATMA – வின் முன்னாள் இந்நாள் பிரஸிடெண்ட்களுக்கு எடுத்துரைத்து ஒரு நன்நம்பிக்கை ஊட்ட வேண்டும். நானும் கடந்த 7, 8,10 நாட்களுக்கு முன் கூட மீண்டும் மீண்டும் இரு வேண்டுகோள் நினைவூட்டல் மின்னஞ்சல்களை கூட (ATMA -வின் இன்றைய பிரஸிடெண்ட்டுக்கு இரு நினைவூட்டல் மின்னஞ்சலும் கூட) அனுப்பிப் பார்த்து விட்டேன். ஆனாலும் அவர் அசைந்து கொடுப்பதாய் தெரியவில்லை என்பதால் தான் வேறு வழியே இல்லாச் சூழலில் உலகத் தமிழ் முகநூல் அன்பர்களின் உதவியை இப்போது நாடியுள்ளேன். முதலில் ATMA – வின் அங்கத்தினர்கள் அனைவருக்குமே எனது வலைப் பூவின் இந்தச் செய்தியைப் பரப்ப முடியவில்லை எனில் எங்கே அமெரிக்கா முழுவதுமுள்ள மற்ற அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இதைப் பரப்புவது?! ஆதலால் தான் மொத்தமாக உலகம் முழுவதும் வியாபித்துள்ள தமிழ் கூறும் நல்லுலகின் பொது மின் வெளிக் குடும்பத்திற்குள் இப்பிரச்னையை எடுத்து வந்துள்ளேன். ஜல்லிக் கட்டுக்கு எழுந்ததைப் போன்ற ஒரு அலை (ஆனால் அதே நேரத்தில் ஒரு மௌன அலை) இதற்கும் ஒரு மௌன எழுச்சி அலை எழுந்தால் ஒழிய எனது வலைப்பூவையும் ஒரு வைரலாக்குவது அத்தனை எளிதல்ல. அமெரிக்க ATMA பிரஸிடெண்ட்களிடம் இராபர்ட் க்ளைவும் டுயூப்ளேவும் செய்ததைக் காட்டிலும் துணிகரமான ஒன்றைச் செய்யச் சொல்லி எதிர்பார்க்கவில்லை. ஜஸ்ட் தனது இதர Trust board members-க்கும் எனது வலைப் பூ செய்தி போய்ச் சேர்ந்து விட்டதா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவ்வளவு தான். இந்தச் சிறு விஷயத்திற்கு இவ்வளவு அதீத பயம் ஏன்.?!

வேண்டுமானால் சென்னையிலுள்ள கிழக்குப் பதிப்பகத்திற்கு ஒரு ஆன்லைன் ஆர்டர் போட்டு இராபர்ட் க்ளைவ் பற்றிய அந்த சிறு புத்தகத்தை (“நாட்டைப் பிடித்த நாடோடி”-விலை ஓரிரு டாலருக்குள் தான் வரும்) ஒரு முறை படித்துப் பார்த்து விட்டே கூட அவர்கள் தங்களின் முடிவை எடுக்கட்டும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s